கோலாலம்பூர், ஜூலை.08-
நாட்டின் தலைமை நீதிபதி நியமன விவகாரத்தில் நீதித்துறை நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை சட்டத்துறை அலுவலகம் இன்று மறுத்துள்ளது.
ஓர் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படும் அளவிற்கு நீதித்துறையில் எந்தவொரு நெருக்கடியோ அல்லது சிக்கலோ ஏற்படவில்லை என்று சட்டத்துறை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நீதி பரிபாலனத்தில் எந்தவொரு நியமனமாக இருந்தாலும் அது கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதித்துறை நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவது அடிப்படையற்ற வாதமாகும் என்று சட்டத்துறை அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த ஆறு ஆண்டு காலமாக நாட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த துன் தெங்கு மைமூன் துவான் மாட், பணி ஓய்வுப் பெற்றதைத் தொடர்ந்து காலியாகியுள்ள அவ்விடத்தையும், அப்பீல் நீதிமன்றத் தலைவர் பதவியையும் நிரப்புவதற்கு காலம் கடத்தப்படுவதற்கு நீதித்துறையில் அரசியல் ஊடுருவல் ஏற்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி நேற்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.