சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கொலை வழக்கு: அந்த ஆடவர் விரைவில் குற்றஞ்சாட்டப்படுவார்

சைபர்ஜெயா, ஜூ

சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுர் அகாரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஓர் ஆண் மற்றும் இரு பெண்களில், இந்த கொலைக்குக் காரணகர்த்தாவாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் அந்த ஆடவர், இன்று காலையில் சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவதாக இருந்தது. எனினும் குற்றஞ்சாட்டப்படும் தேதி இறுதி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட ஆடவர், மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவார் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

20 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், இன்று காலை 8.30 மணிக்கு நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதாக இருந்தது. எனினும் குற்றஞ்சாட்டப்படும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்ஹிஸாம் பஹாமான் குறிப்பிட்டார்.

19 க்கும் 20 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் கடந்த ஜுன் 27 ஆம் தேதி ஜோகூர் பாரு மற்றும் நெகிரி செம்பிலான் கெமஞ்சேவில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண், கொலை செய்யப்பட்ட 20 வயது மனிஷாபிரிட் கவுருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த சைபர்ஜெயா பல்லைக்கழக மாணவி என்று கூறப்படுகிறது.

அந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து தங்கும் தனது காதலனிடம் அந்தப் பெண் ஒப்படைத்து விட்டுச் சென்ற வீட்டுச் சாவி மற்றும் எஸ்சஸ் கார்ட்டைப் பயன்படுத்தி, அந்த ஆடவன் இந்தக் கொலையைப் புரிந்துள்ளான் என்று நம்பப்படுகிறது.

விசாரணைக்காக அவனுடன் சேர்ந்து அந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்ட போதிலும், குடும்பத்தைப் பார்ப்பதற்குத் தாம் ஊருக்குச் செல்வதாகக் கூறி, தன் காதலனிடம் வீட்டுச் சாவியையும், எஸ்சஸ் கார்ட்டையும் ஒப்படைத்துச் சென்ற அந்த மாணவி, நோக்கத்துடன் அவற்றை ஒப்படைத்தாரா? அல்லது வழக்கமாகக் கொடுப்பதைப் போல அவற்றைக் கொடுத்து விட்டுச் சென்றாரா? என்பது குறித்து போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த மாணவி தீய நோக்கத்தைக் கொண்டு இருக்கவில்லை என்று விசாரணையில் கண்டறியப்படுமானால், அவரும், அவருடன் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு பெண்ணும் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜுன் 24 ஆம் தேதி சைபர்ஜெயாவில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீட்டில் நிகழ்ந்த இந்தக் கொலையில் சரவாக், கூச்சிங்கைச் சேர்ந்த ஒரு சீக்கியப் பெண்ணான மனிஷாபிரிட் கவுர் கொலை செய்யப்பட்டார்.

அந்த மாணவியின் தலையில் பலம் கொண்ட ஒரு பொருளினால் அடிக்கப்பட்டதால் தலையில் பலத்த காயத்துடன் அவர் உயிரிழந்ததாகச் சவப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS