சொக்சோ மறுவாழ்வு மையத்திற்கு வருகை புரிந்தார் அரசாங்கத் தலைமைச் செயலாளர்

மலாக்கா, ஜூலை.08-

அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி பின் அபு பக்கர், நேற்று மலாக்காவில் உள்ள பிஆர்பிடிஏஆர் எனும் துன் அப்துல் ரசாக் சொக்சோ மறுவாழ்வு மையத்திற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டார். 

விபத்துக்கள் அல்லது நோய்கள் காரணமாக தங்கள் ஆற்றலை இழந்த தொழிலாளர்களுக்கு அம்மையம் வழங்கும் விரிவான மறுவாழ்வுத் திட்ட அமலாக்கங்களை நேரடியாக அணுக்கமாகக் கண்டறிந்து மதிப்பாய்வு செய்வதே அவ்வருகையின் நோக்கமாகும். 

வருகையாளர் குழுவில் மனிதவள அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அஸ்மான் பின் முகமட் யூசோஃப் மற்றும் பிரதமரின் அந்தரங்கச் செயலாளர் டத்தோ ஷாரோல் அனுவார் பின் சர்மான் ஆகியோரும் இணைந்திருந்தனர். அவர்களை பிஆர்பிடிஏஆ நிர்வாக இயக்குநர் டத்தோ டாக்டர் ஹாஃபீஸ் ஹுசைன் வரவேற்றார். 

வருகையாளர்களுக்கு , ​​பிஆர்பிடிஏஆரின் ஒரு தசாப்த கால செயல்பாட்டு இலக்குகள் மற்றும் அடைவு நிலைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதோடு தீவிர மருத்துவ மறுவாழ்வு மற்றும் பிசியோதெரபி சிகிச்சை, ஜப்பானின் ஹால் சூட் போன்ற ரோபோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு, உயர் தொழில்நுட்ப நீர் சிகிச்சைக் குளம், வேலைக்குத் திரும்புவதை ஆதரிக்கும் தொழில் பயிற்சி திட்டங்கள் குறித்தும் விளக்கம் கொடுக்கப்பட்டது. 

தொழிலாளர்கள் உடல் ரீதியாக மீள்வது மட்டுமல்லாமல், புதுத் தெம்பு பெற்று, தேசிய வளர்ச்சிக்கு மீண்டும் பங்களிப்பதை உறுதிச் செய்ய, தொழில்நுட்பம், தொழில்முறை நிபுணத்துவம் மற்றும் மனிதத் தொடுதல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் அடிப்படையிலான அனைத்துலகத் தரமிக்கச் சூழலை அமைத்துக் கொடுப்பதில் சொக்சோ கொண்டுள்ள கடப்பாட்டை இந்த வருகை புலப்படுத்துகிறது.   

WATCH OUR LATEST NEWS