ஜார்ஜ்டவுன், ஜூலை.08-
ஆறாம் படிவ மாணவன், டி. நவீன் கொலை வழக்கு விசாரணையைப் பினாங்கு உயர் நீதிமன்றம் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.
வழக்கு விசாரணைத் தேதிகள், வரும் நவம்பர் மாதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவீன் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட நான்கு இந்திய நபர்கள், எதிர்வாதம் புரியும்படி கடந்த ஜனவரி மாதம் அப்பீல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த நால்வருக்கு எதிரான விசாரணை இன்று தொடங்கி, வரும் வெள்ளிக்கிழமை வரை பினாங்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெறவிருந்தது.
எனினும் கொலை வழக்கில் ஐந்தாவது நபரான 34 வயது எஸ். கோபிநாத் என்பவர், விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுக்காக பிராசிகியூஷன் தரப்பு காத்திருக்கும் வரை இந்த நால்வருக்கு எதிரான விசாரணையைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கும்படி துணை பப்ளிக் பிராசிகியூட்டர் யாஸிட் முஸ்தாகிம் ரொஸ்லான் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு உயர் நீதிமன்றம்அனுமதி அளித்துள்ளது.
இவ்வழக்கு விசாரணை வரும் நவம்பர் 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் என்று விசாரணைத் தேதியை உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
மாணவன் நவீனைக் கொலை செய்ததாக ஜெ. ரகேஸ் சுதன், எஸ். கோகுலன் மற்றும் சம்பவம் நிகழும் போது வயது குறைந்த இரு இளைஞர்கள் என நால்வர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுன் 9 ஆம் தேதி பினாங்கு புக்கிட் குளுகோரில் ஒரு வீடமைப்புப் பகுதியில் நவீனை அடித்துக் கொன்றதாக அந்த நால்வர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.