கோலாலம்பூர், ஜூலை.08-
கோலாலம்பூர், பண்டார் பாரு செந்தூலில் ஓர் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் 6 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவியான 21 வயது தவனேஸ்வரி மரணத்தில் குற்றத்தன்மையில்லை என்று போலீசார் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஜுலை 2 ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்துள்ளனர். இதில் குற்றத்தன்மைக்கான அம்சங்கள் எதுவும் இல்லை என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் சுகார்னோ முகமட் ஸஹாரி தெரிவித்தார்.
தவனேஸ்வரி தங்கியிருந்த பங்சாபுரி மாவார் செந்தூல் பெர்டானா வீடமைப்புப் பகுதியின் ஹாஸ்டலில் ஆறாவது மாடியிலிருந்து அவர் தள்ளிவிடப்பட்டு இருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாக அந்த மாணவியின் தந்தை மோகன் பெருமாள், தாயார் லலிதா அருளப்பன் ஆகியோர் அண்மையில் புகார் தெரிவித்து இருந்தனர்.
தங்கள் மகள், கோலாலம்பூரில் உள்ள பிரபல தனியார் அனைத்துலகக் கல்லூரியில் போலீஸ் குற்றப்புலனாய்வுத் துறையில் டிப்ளோமா கல்வியைக் கற்று வந்ததாக அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.
தங்கள் மகளின் இறப்புக்கு சில மணி நேரத்திற்கு முன்னர் பின்னிரவு ஒரு மணியளவில் வீடியோ கைப்பேசி அழைப்பில் தங்கள் மகளோடு பேசியதாகவும், அப்போது அவரின் உதடு மற்றும் முகம் வீங்கியிருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். அது குறித்து வினவிய போது, உடன் தங்கியிருந்த மாணவி தன்னை அடிக்கப் போவதாக மிரட்டியதாகக் குறிப்பிட்டு இருந்தார் என்று தந்தை மோகன் தெரிவித்து இருந்தார்.
நெகிரி செம்பிலான், பாஹாவ், கம்போங் சீனா, தாமான் ஶ்ரீ முத்தியாராவைச் சேர்ந்த தவனேஸ்வரின் மரணம் தொடர்பில் போலீசார் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறப்பினர் ஸ்ரீ சஞ்சிவன் வலியுறுத்தியிருந்தார்.
எனினும் தவனேஸ்வரின் மரணத்தை போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தியுள்ளதாக ஏசிபி அஹ்மட் சுகார்னோ குறிப்பிட்டார்.