பெட்டாலிங் ஜெயா, ஜூலை.08-
மகளிர் இரட்டையர் பிரிவு வீராங்கனைகளான பெர்லி டானும் எம். தீனாவும் மலேசிய பூப்பந்து சங்கத்துடனான தங்களது ஒப்பந்தங்களைப் புதுப்பிக்க வாய்ப்புள்ளது.
பிஏஎம்முடனான அவர்களின் ஒப்பந்தங்கள் கடந்தாண்டு டிசம்பரில் முடிவடைந்தன. அவர்களின் எதிர்காலம் குறித்து பல மாதங்களாக பல ஆரூடங்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில் அவ்விருவரும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஜோடியுடனான பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் காணப்படுவதாக பிஏஎம் பொதுச் செயலாளர் டத்தோ கென்னி கோ தெரிவித்தார்.
“பெர்லி-தீனாவுடன் நாங்கள் ஊக்கமளிக்கும் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளோம். சிறந்த முடிவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கென்னி கூறினார்.
ஜப்பான் பொது பூப்பந்து போட்டிக்கு புறப்படுவதற்கு முன்பு அவர்களின் ஒப்பந்த நிலைமை தீர்க்கப்படும் என அவர் குறிப்பிட்டார். அப்போட்டி அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.