சிப்பாங், ஜூலை.08-
சிலாங்கூர், சிப்பாங், பண்டார் பாரு சாலாக் திங்கியில் உள்ள ஒரு கோவிலில் சிறப்பு பூஜை என்ற பெயரில் மாது ஒருவரை மானபங்கம் புரிந்ததாக நம்பப்படும் ஓர் இந்தியப் பிரஜையான கோவில் பூசாரி ஒருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த ஜுலை 4 ஆம் தேதி இரவு 8.15 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் 27 வயது மாது ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்ஹிஸாம் பஹாமான் தெரிவித்தார்.
அந்தக் கோவிலின் குருக்கள் இந்தியாவிற்குச் சென்றிருப்பதை தொடர்ந்து கோவிலில் பணியாற்றுவதற்கு ஒரு பூசாரி தற்காலிமாக நியமிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவிலுக்கு அடிக்கடி வரும் அந்த மாதுவுக்கு சிறப்புப் பூஜை செய்வதாகக் கூறி அந்த மாதுவுக்குத் தீர்த்தம் கொடுத்து, முகத்திலும், உடலிலும் தெளித்துக் கொள்ளுமாறு பூசாரி கேட்டுக் கொண்டுள்ளார். அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த பூசாரி, மாதுவை மானபங்கம் செய்துள்ளார்.
ஓர் இந்தியப் பிரஜையான அந்த பூசாரி, இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகியுள்ளார். இவ்விவகாரம், குற்றவியல் சட்டம் 354 ஆவது பிரிவின் கீழ் தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாக ஏசிபி நோர்ஹிஸாம் தெரிவித்தார்.