சிங்கப்பூர், ஜூலை.08-
ஆஸ்திரேலியா, பிரிஸ்பனிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்சுக்குச் சொந்தமான SQ 246 விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் பெர்த்துக்குத் திருப்பப்பட்டது.
இச்சம்பவம் இன்று அதிகாலையில் ஏற்பட்டது. நேற்று ஜுலை 7 ஆம் தேதி இரவு, பிரிஸ்பன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம், இன்று அதிகாலை 5 மணிக்குச் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்தது.
எனினும் அந்த விமானம் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதியான பிரிஸ்பனிலிருந்து புறப்பட்டு, அந்த நாட்டின் விளிம்பில் உள்ள புரூம் நகரை நோக்கிப் பயணித்தப் பின்னர் பெர்த்துக்குத் திருப்பப்படுவது விமான கண்காணிப்பு வலைத்தளமான Flightradar24 இல் தெரிய வந்துள்ளது.
அந்த ஏர்பஸ் A350 ரக விமானம், வானில் பறக்கும் போது, தொழில்நுட்பச் சிக்கலை எதிர்நோக்கியது என்று ஆஸ்திரேலியா பத்திரிகை கூறுகிறது.
விமானத்தில் இருந்த 272 பயணிகளும், 15 பணியாளர்களும் காலை 7 மணியளவில் பெர்த்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.