பள்ளி வேன் விபத்து: மாணவி அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை

ஜோகூர் பாரு, ஜூலை.08-

ஜோகூர் பாருவில் பள்ளி வேன் ஒன்று விபத்துக்குள்ளாகி காயமுற்ற நான்கு மாணவர்களில் ஒருவர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்று அவரின் பெற்றோர் தெரிவித்தனர்.

தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கல்வி பயின்று வரும் 11 வயது எஸ். தனலெட்சுமி என்ற அந்த மாணவி இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் பயத்தில் இருப்பதாக அவரின் தாயார் 47 வயது எம். கார்த்தியாயினி குறிப்பிட்டார்.

தனது மகள் தனலெட்சுமி, பள்ளி முடிந்து சக மாணவர்களுடன் பள்ளி வேனில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கார்த்தியாயினி தெரிவித்தார்.

கை, கால் மற்றும் தாடையில் அவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவில் உறங்கிக் கொண்டு இருந்த போது அவர் பல முறை கத்தி அலறியதாக கார்த்தியாயினி குறிப்பிட்டார்.

இவ்விபத்து தொடர்பில் வேன் ஓட்டுநரைக் குறைக் கூறுவதற்கு ஒன்றுமில்லை. பிள்ளைகள் பிழைத்ததே பெரிய விஷயம் என்று ஜோகூர் பாரு, தாமான் முன்ஷி இப்ராஹிமில் வசிக்கும் கார்த்தியாயினியைச் செய்தியாளர்கள் அணுகிய போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS