கோலாலம்பூர், ஜூலை.09-
நாட்டின் தேசியக் காரரான புரோட்டோன் சாகாவிற்கு இன்று ஜுலை 9 ஆம் தேதி 40 வயது நிறைவடைகிறது. கடந்த 1985 ஆம் ஆண்டு இன்றைய தேதியில் மலேசியாவின் முதலாவது தயாரிப்பான புரோட்டோன் சாகா அறிமுகப்படுத்தப்பட்டது.
நாட்டின் நான்காவது பிரதமரான துன் மகாதீர் முகமட், பெருசாஹாஆன் ஓதோமோபில் நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட், எனும் புரோட்டோன் நிறுவனத்தை நிறுவி மலேசியாவின் முதலாவது காரை நாட்டிற்கு அறிமுகப்படுத்தினார்.
ஷா ஆலாமில் நிறுவப்பட்ட கார் உற்பத்தித் தொழில் பேட்டையில் ஜப்பானின் மிகப் பெரியக் கார் தயாரிப்பு நிறுவனமான மிட்சுபிஷி மோட்டர்ஸ் கோர்பரேஷன் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் முதலாவது புரோட்டோன் கார் உதயமானது.
1981 ஆம் ஆண்டில் நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்ற துன் மகாதீர், தமது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, நாடு திரும்பியப் பின்னர் அவர் அறிமுகப்படுத்திய கிழக்கை நோக்கும் கொள்கையின் முதலாவது திட்டமே மலேசியாவின் சொந்தக் கார் தயாரிப்பு வியூகமாகும்.
இந்த 40 ஆண்டுகளில் பல்வேறு மாடல் கார்களை வெளியிட்டுள்ள புரோட்டோன் நிறுவனம், உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமானக் கார்களை விற்பனை செய்து சாதனைப் படைத்துள்ளது.