கோலாலம்பூர், ஜூலை.09-
புவிசார் அரசியல் ஆதாயத்திற்காக வர்த்தகங்கள், மிகுந்த அழுத்தம் தரும் ஆயுதங்களாகத் தற்போது பயன்படுத்தப்படுவதால் நிறுவன ஒத்திசைவு மற்றும் வியூக தொலைநோக்குப் பார்வையுடன் பதிலளிக்க தயாராக வேண்டும் என்று ஆசியான் நாடுகளுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
துரித துருவமுனைப்பு அடைந்து வரும் உலகில் ஏற்றுமதிக்கான வரிகள், முதலீடு போன்ற பொருளாதார வளர்ச்சிக்கானப் பாரம்பரியச் சாதனங்கள் , தற்போது புவிசார் அரசியல் போட்டியில் கூர்மைப்படுத்தப்பட்ட ஆயுதங்களாக மாறி வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இது தற்காலிகமாக வீசக்கூடிய புயல் அல்ல, இது நமது காலத்தின் புதிய வானிலையாகும் என்று கோலாலம்பூரில் இன்று 58 ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அன்வார் இதனைத் தெரிவித்தார்.
இது போன்ற போட்டா போட்டிகளைச் சமாளிப்பதற்கு ஆசியான், இந்த யதார்த்தத்தைத் தெளிவுடனும், உறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டும். இதற்கு ஆசியான் நாடுகள் ஒத்திசைவுடன், தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுவது அவசியமாகும் என்று அன்வார் வலியுறுத்தினார்.