மூவார், ஜூலை.09-
தனது பெற்றோரையும், உறவுக்காரப் பிள்ளையையும் தீயிட்டுக் கொன்றதாக மூவார் உயர் நீதிமன்றத்தில் ஆடவர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
48 வயது அஸ்மான் முகமட் நோர் என்ற அந்த நபருக்கு எதிரான கொலை வழக்கு, முதல் முறையாக உயர் நீதிமன்ற நீதிபதி சூரிய குமாரி டிஜே பவுல் முன்னிலையில் இன்று செவிமடுக்கப்பட்டது.
நரம்பியல் நோய்க்கு ஆளாகியுள்ளதாக நம்பப்படும் குற்றஞ்சாட்டப்பட்ட அஸ்மான், சக்கர நாற்காலி மூலம் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஜோகூர், பாகோ, கம்போங் பாயா ரெடான்-ஜாலான் செகோலாவில் ஒரு வீட்டில் தனது தந்தை 82 வயது முகமட் நோர் முகமட் யாசின், தாயார் 76 வயது ஆரா அப்துல் ஹாமிட் மற்றும் உறவுக்காரப் பிள்ளையான 11 வயது நோர் ஹாஷிம் ஆகிய மூவரைக் கொலை செய்ததாக அந்த நபர் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அந்த மூவரும் தங்கியிருந்த வீட்டிற்கு தீயிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மரணம் விளைவித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் ஒரு வேலையற்ற நபரான சம்பந்தப்பட்ட ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.