பாலியல் பலாத்காரம்: இருவருக்குத் தடுப்புக் காவல்

மூவார், ஜூலை.09-

ஜோகூர், பாகோவில் பொது உயர்கல்விக்கூடத்தில் பயின்று வரும் மாணவி ஒருவரை மடக்கி, கொள்ளையடித்தப் பின்னர் , அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக வயது குறைந்த இளைஞர் உட்பட இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 19 வயது ஆடவருக்கு 5 நாள் தடுப்புக் காவலும், 17 வயது இளைஞருக்கு 3 நாள் தடுப்புக் காவலும் விதிப்பதற்கு மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

நேற்று முன்தினம் 20 வயதுடைய அந்தப் பல்கலைக்கழக மாணவி, தனது 23 வயது காதலனுடன் பஞ்சோர், ஜாலான் கம்போங் ஜாவா சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவர்கள், இவ்விரு நபர்களால் மடக்கப்பட்டுள்ளனர்.

பணம் கேட்டு, அந்தப் பெண்ணின் காதலனைத் தாக்கிய அவ்விருவரும், பின்னர் அந்தப் பெண்ணிடம் 250 ரிங்கிட்ட பறித்துக் கொண்டனர். அந்தப் பெண்ணை தங்களிடமே விட்டுச் செல்லுமாறு கூறி, அந்த ஆடவரை அங்கிருந்து விரட்டிய அவர்கள், பின்னர் தங்களின் மோட்டார் சைக்கிளில் அந்தப் பெண்ணைக் கொண்டுச் சென்றுள்ளனர்.

சிறிது தூரத்தில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளனர் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

பிறகு அந்தப் பெண்ணை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து, பல்லைகலைக்கழக வளாகத்தில் விட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பாக அந்த பல்கலைக்கழக மாணவியும், அவரின் காதலனும் பஞ்சோர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS