கோலாலம்பூர், ஜூலை.09-
வரும் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து அமெரிக்காவிற்கு மலேசியா ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் நாளை வியாழக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ருபியோவைச் சந்தித்துத் தாம் பேசவிருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
அண்மையில் அமெரிக்காவிற்குத் தூதுக் குழுவை அனுப்பிய மலேசியா, அமெரிக்கா, ஒரு தலைபட்சமாக விதிக்கக்கூடிய இந்த வரி விதிப்பினால் மலேசியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகம் மட்டுமின்றி இந்தப் பிராந்தியத்தின் வர்த்தகத்திலும் எதிர்மறையான தாக்கத்தை விளைவிக்கும் என்பது தெளிவுப்படுத்தப்பட்டதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
பேச்சு வார்த்தைக்குப் பின்னரும் 25 விழுக்காடு வரி விதிப்பில் அமெரிக்கா உறுதியாக இருந்தாலும், பேச்சு வார்த்தைகளுக்கான கதவுகள் மூடப்படவில்லை. நாளை நடைபெறும் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருடன் விவகாரம் குறித்து தாம் விவாதிக்கவிருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் தெளிவுபடுத்தினார்.