கோலாலம்பூர், ஜூலை.10-
ஓபிஆர் எனப்படும் உடனடி வட்டி விகிதத்தை மத்திய வங்கியான பேங்க் நெகாரா 3 விழுக்காட்டிலிருந்து 2.75 விழுக்காடாகக் குறைத்து இருக்கிறது. நேற்று நடைபெற்ற நிதியியல் கொள்கைக் குழு கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகள் வரை இதைக் குறைக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு 3 விழுக்காடு ஓபிஆர் வட்டி விகிதம், முதல் முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் பொருளாதாரம் வலிமையான அடித்தளத்தைக் கொண்டிருந்தாலும் நாட்டுக்கு வெளியே நிகழும் பல்வேறு நிலவரங்களால் நிச்சயமற்றத் தன்மைகள் சூழ்ந்து வருகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மக்களின் செலவழிக்கும் வலிமை வலுப் பெற்று இருப்பதால் நாட்டின் பொருளாதாரம் நிலையாகவே உள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.