கோலாலம்பூர், ஜூலை.10-
கடந்த வாரம் நாட்டின் தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெற்ற துன் தெங்கு மைமூன் துவான் மாட் மற்றும் அப்பீல் நீதிமன்றத் தலைவர் பதவியிலிருந்து பணி ஓய்வு பெற்ற டான் ஶ்ரீ அபாங் இஸ்கண்டார் அபாங் ஹஷிம் ஆகியோரின் காலி இடங்களை நிரப்புவது குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
நீதிப் பரிபாலனத்தின் அவ்விரு முக்கியப் பதவிகளும் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சத்தை அமைச்சரவைக் கவனத்தில் கொண்டுள்ளதாகச் சட்டச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சாயிட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விளக்கமளிப்பும் அமைச்சரவையில் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார். இதன் தொடர்பில் வரும் ஜுலை 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை 269 ஆவது ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டம் நடைபெறுவதையும் அஸாலினா குறிப்பிட்டார்.
சட்ட இறையாண்மையின் தூணாக விளங்கும் நீதி பரிபாலனத்தையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்கள் கொண்டுள்ள கவலைகளை அரசாங்கம் ஆழமாகப் புரிந்து கொள்ள முடிகிறது என்று அஸாலினா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.