மாணவி மனிஷா கோர மரணம்: ஸ்ரீ தர்வீன் மற்றும் டி. தினேஸ்வரி மீது கொலைக் குற்றச்சாட்டு

சிப்பாங், ஜூலை.10-

சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுர் அகாரா படுகொலை தொடர்பில் 19 வயதுடைய ஓர் இந்திய ஆடவரும், ஓர் இந்தியப் பெண்ணும் சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று காலையில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

எம். ஸ்ரீ தர்வீன் மற்றும் அவரின் காதலியான டி. தினேஸ்வரி ஆகிய இருவரும், மாஜிஸ்திரேட் கைராதுல் அனிமா ஜெலானி முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தர்வீன் மீது கொலைக் குற்றச்சாட்டும், தினேஸ்வரி மீது கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.

இது கொலை வழக்கு என்பதால், இவ்வழக்கை ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு ஏதுவாக தர்வீன் மற்றும் தினேஸ்வரி ஆகியோரிடம் இன்று, எந்தவொரு வாக்குமூலமும் பதிவுச் செய்யப்படவில்லை.

கடந்த ஜுன் 23 ஆம் தேதி இரவு 9.11 மணிக்கும், 11.31 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சைபர்ஜெயாவில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீட்டில் சரவாக், கூச்சிங்கைச் சேர்ந்த ஒரு சீக்கியப் பெண்ணான 20 வயது மனிஷாபிரிட் கவுர் என்பவரைக் கொலை செய்ததாக தர்வீன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் கொலைக்குத் தனது காதலன் தர்வீனுக்கு உடந்தையாக இருந்ததாக தினேஸ்வரி மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. கொலை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தது ஆகிய இரு குற்றச்சாட்டுகளும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அச்சட்டத்தின் கீழ் இருவருக்கும் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்கப்படும்.

இருவருக்கும் ஜாமீன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிறைக்குக் கொண்டுச் செல்ல உத்தரவிடப்பட்டது. கொலையுண்ட பல்கலைக்கழக மாணவியின் சவப் பரிசோதனை அறிக்கை மற்றும் ரசாயன அறிக்கை ஆகியவை சமர்ப்பிக்கப்படுவதற்கு ஏதுவாக இக்கொலை வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS