ஷா ஆலாம், ஜூலை.10-
சிலாங்கூர் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கு வழங்கப்பட்ட நிலங்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்படவில்லை என்றால் அந்த நிலங்களை மாநில அரசாங்கம் திரும்ப எடுத்துக் கொள்ளும் என்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
வழங்கப்பட்ட நிலங்களை சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்கின்றர்கள், குறிப்பிட்டக் காலத்திற்குள் பயன்படுத்திக் கொள்ளத் தவறுவார்களேயானால் அந்த நிலங்கள், தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில ஊராட்சி மற்றும் சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங் சுவீ லிம் தெரிவித்தார்.
பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிஸ்ட் சர்வ சமய மன்றத்தின் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 400 நிலங்களை சிலாங்கூர் அரசு அங்கீகரித்துள்ளதாக அவர் கூறினார்.