குஜராத், ஜூலை.10-
இந்தியா, குஜராத்தில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்ததில் உயிரிழந்தர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று புதன்கிழமை நடந்த இச்சம்பவத்தில் 43 ஆண்டு கால பழமை வாய்ந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரிகள், கார்கள் ஆற்றில் விழுந்தன. மீட்புப் பணிகள் கடந்த இரண்டு நாட்களாக முழு வீச்சில் நடந்து வருகிறது.
குஜராத் நெடுஞ்சாலையில் கம்பீரா என்ற பாலம், மஹிசாகர் என்ற ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளது. நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இந்தப் பாலம் இணைக்கிறது.
இந்நிலையில் கம்பீரா பாலம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. பாலத்தின் ஒரு பகுதி அப்படியே ஆற்றில் விழ, அப்போது வந்து கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள் உள்பட 6 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்தன.
விபத்தில் முதல் கட்டமாக 10 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.