ஈப்போ, ஜூலை.10-
விடுதலை செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சிறைச்சாலையில் மரணம் அடைந்த கைதி ஒருவரின் தாயாருக்கு 5 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்கும்படி ஈப்போ உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
30 வயதான ஆர். சிவா, என்ற அந்தக் கைதி, பேராக், தாப்பா சிறைச்சாலையில் திருட்டுக் குற்றத்திற்காக எட்டு மாத சிறைத் தண்டனை அனுபவித்து வந்துள்ளார்.
சிவா சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வீடு திரும்ப வேண்டிய நாளில், அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியூட்டும் அழைப்பு வந்தது. மகனின் சடலத்தை மருத்துவமனையிலிருந்து கோரிச் செல்லும்படி சிறைச்சாலை இலாகா கேட்டுக் கொண்டது.
தனது மகன் சிவாவின் மரணத்தில் கவனக்குறைவும், அலட்சிய் போக்கும் இருப்பதாகக் கூறி அவரின் தாயார் ஆர். முனியம்மா, சிறைச்சாலை தலைமை இயக்குநர், சிறைச்சாலை இலாகா மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக இந்த சிவில் வழக்கைத் தொடுத்து இருந்தார்.
எனினும் சிவாவின் உடல்நலம் மற்றும் அவரின் நல்வாழ்வை சிறை இலாகாவினர் கவனிக்கத் தவறிவிட்டதாக நீதிமன்றம் கண்டறிந்தது.
சிறைக்குள் நுழைந்த போது அவர் ஆரோக்கியமாக இருந்தார். ஆனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது ஏதோ பெரிய தவறு நடந்துள்ளது என்று உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
இவ்வழக்கில் முனியம்மா சார்பில் வழக்கறிஞர் எம். விஸ்வநாதன் ஆஜராகியிருந்தார்.