ஈப்போ, ஜூலை.10-
பேராக், சிம்பாங் பூலாயில் சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே வாகனத்தை ஆபத்தான முறையில் செலுத்திய அமலாக்க அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த அமலாக்க அதிகாரி, சாலை வளைவில் முந்திச் செல்வதற்குத் தடை விதிக்கும், சாலை இரட்டைக் கோட்டையும் பொருட்டுபடுத்தாமல், கனரக லோரியை முந்திச் செல்லும் முயற்சியில் எதிரே வந்த வாகனத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமாக வாகனத்தைச் செலுத்திய காணொளி, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலானது.
வாகனமோட்டிகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஜேபிஜே அமலாக்க அதிகாரிகள், சாலை ரவுடிகளைப் போல் அபாயகரமான வாகனத்தைச் செலுத்தியதற்கு பொதுமக்களிடமிருந்து பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்குத் தார்மீக பொறுப்பேற்று ஜேபிஜே தலைமை இயக்குநர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்த அமலாக்க அதிகாரி, ஏற்கனவே இது போன்ற குற்றங்களைப் புரிந்துள்ள நிலையில் விசாரணைக்கு ஏதுவாக அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று ஜேபிஜே தெரிவித்துள்ளது.