ஜார்ஜ்டவுன், ஜூலை.10-
பினாங்கு, சிம்பாங் அம்பாட்டில் வீற்றிருக்கும் 130 ஆண்டு கால பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சி அம்மன் தேவஸ்தானத்திற்கு அருகில் உள்ள நிலத்தை அடுத்த ஆண்டில் முழுமையாக விலைக்கு வாங்கி விடுவது மூலம் ஆலயத்தின் மண்டபத்தைக் கட்டுவதற்கான பணி உடனடியாகத் தொடங்கப்படும் என்று பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அருகில் உள்ள 4,171 சதுர அடிப் பரப்பளவைக் கொண்ட அந்த நிலத்தை வாங்குவதற்கு ஆலய நிர்வாகத்தினர் கடந்த ஆண்டு தம்மை வந்து சந்தித்தனர். இது தொடர்பாக நில உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நில விலையைக் குறைப்பதற்கான முயற்சியில் ஆலய நிர்வாகத்துடன் இணைந்து தாம் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மூன்று லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள அந்த நிலத்தை ஆண்டுக்கு ஒரு லட்சம் ரிங்கிட் வீதம் செலுத்தி மூன்று ஆண்டுகளுக்குள் நிலத்தை முழுமையாக வாங்கிவிடலாம் என்ற ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி இன்று வெற்றி அளித்துள்ளதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.
அந்த மூன்று லட்சம் ரிங்கிட்டிற்கான ஆகக் கடைசியானத் தொகை அடுத்த ஆண்டில் செலுத்தப்பட்டு விடும் என்று ஆலய மண்டபத்திற்கு நில வாங்கும் நிதிக்காக நடத்தப்பட்ட இந்த விருந்தோம்பல் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ சுந்தராஜு இதனைத் தெரிவித்தார்.
நிலத்தை வாங்குவதற்கு முதல் கட்டப் பணம் செலுத்துவதற்கு டத்தோஸ்ரீ சுந்தராஜு 50 ஆயிரம் ரிங்கிட் வழங்கிய வேளையில் ஆலய நிர்வாகம் 50 ஆயிரம் வெள்ளி வழங்கியது.
இந்த விருந்தோம்பல் நிகழ்வின் வாயிலாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் திரட்டப்பட்டது. பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினராகத் தாம் பொறுப்பேற்ற 22 மாதக் காலக் கட்டத்தில் ஆறு கோவில்களுக்கும் , ஒரு சீன ஆலயத்திற்கும் நிலம் பெற்றுக் கொடுத்து இருப்பதாக டத்தோ சுந்தராஜு தமது உரையில் தெரிவித்தார்.