கோலாலம்பூர், ஜூலை.10-
உயர் மட்ட அளவிலான நீதிபதிகள் நியமனத்தில் பிரதமர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தனிப்பட்ட நலன் சார்ந்த அம்சங்கள் உண்டு என்று எதிர்கட்சித் தலைவர் ஹம்ஸா ஸைனுடின் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வார் நீதிமன்றத்தில் எதிர்நோக்கியுள்ள சிவில் வழக்குக்கு இன்னும் தீர்வு காணப்படாத நிலையில் நீதிபதிகள் நியமனத்தில் அவருக்கு நலன் சார்ந்த அம்சங்கள் இருக்கக்கூடும் என்று லாருட் எம்.பி.யான ஹம்ஸா ஸைனுடின் குறிப்பிட்டார்.
இத்தகையச் சூழ்நிலையானது, நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடுகள் உருவாகியிருக்கலாம் என்ற சந்தேக உணர்வு மேலாங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தில் தாம் சம்பந்தப்பட்ட சிவில் வழக்கு ஒன்றில் பிரதமருக்கானச் சட்டப் பாதுகாப்பு தொடர்பில் அன்வார் ஒன்பது சட்டக் கேள்விகளை முன்வைத்து, கூட்டரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மனு ஒன்று, இன்னமும் நிலுவையில் இருப்பதை ஹம்ஸா ஸைனுடின் சுட்டிக் காட்டினார்.