கோலாலம்பூர், ஜூலை.10-
‘இளைஞர்கள்’ என அழைக்கப்படுபவர்களுக்கு வயது வரம்பை 30 ஆக நிலை நிறுத்தும் விதிமுறை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி கட்டாயமாக அமல்படுத்தப்படும் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹான்னா இயோ இன்று திட்டவட்டமாக அறிவித்தார். இந்த உத்தேசப் பரிந்துரையை அமல்படுத்தும் திட்டம், கடந்த காலங்களில் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. இம்முறை ஒத்தி வைக்கப்படாது. மாறாக, நடைமுறைப்படுத்தப்படும் என்று ஹன்னா இயோ விளக்கினார்.
இது தொடர்பாக இளைஞர்கள் அமைப்புகளுடன் அமைச்சு சந்திப்பு நடத்தி உரிய விளக்கமளிப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதே வேளையில் இது தொடர்பாக அமைச்சரவையில் ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
30 வயதிற்கு உட்பட்டவர்களே ‘இளைஞர்கள்‘ என்ற வரையறை மலேசிய இளைஞர் கொள்கையிலும் அனைத்துலகத் தரத்திற்கு ஏற்பவும் அமைக்கப்பட்டு இருப்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.