2025 இல் குறைந்தபட்ச சம்பளம் தொடர்பில் ஒரே ஒரு பேருந்து ஓட்டுநரிடமிருந்து மட்டுமே புகார் பெறப்பட்டுள்ளது

நிபோங் திபால், ஜூலை.10-

2025 ஆண்டில் குறைந்தபட்ச சம்பளமாக 1,700 ரிங்கிட் அமல்படுத்தப்பட்டுள்ள வேளையில் முதல் பாதி ஆண்டில் பதிவு செய்யப்பட்ட புகார்களில் குறைந்தபட்ச சம்பளம் கிடைக்காதது குறித்து பேருந்து ஓட்டுநர் ஒருவரிடமிருந்து மட்டுமே ஒரே ஒரு புகாரை மனித வள அமைச்சு பெற்றுள்ளது என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இது போன்ற புகார்கள் எதனையும் அமைச்சு பெறவில்லை என்று ஸ்டீவன் சிம் கூறினார். இருப்பினும் அரசாங்கம் அமல்படுத்திய 1,700 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பள முறையை கடைப்பிடிக்கத் தவறியதற்காக பெனாவார் எக்ஸ்பிரஸ் லைன் பெர்ஹாட் பேருந்து நிறுவனம் அடையாளம் காணப்பட்டு அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

குறைந்தபட்ச சம்பள நடைமுறையை அனைத்து முதலாளிகளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று இவ்வேளையில் தாம் கேட்டுக் கொள்வதாக ஸ்டீவன் சிம் வலியுறுத்தினார்.

இந்த குறைந்தபட்ச சம்பள நடைமுறை என்பது அரசாங்கத்தின் பரிந்துரை அல்ல, மாறாக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான ஒரு சட்டப்பூர்வத் தேவையை முதலாளிமார்கள் கண்டிப்பாக செயல்படுத்தியாக வேண்டும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் கேட்டுக் கொண்டார்.

இன்று பினாங்கு, செபராங் பிறை சிறை வளாகத்தில் மைஃபுயூச்சர்ஜோப்ஸ் தொழில் மற்றும் தொழில்முனைவோர் கண்காட்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS