ஜோகூர் பாரு, ஜூலை.10-
அரச மலேசிய போலீஸ் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, ஜோகூர், கெலாங் பாத்தா, சுங்கை பூலாய் அருகில் இன்று விபத்துக்குள்ளான சம்பவத்தில் அந்த ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிப்பதில் தற்போது தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
ஹெலிகாப்டர் விழுந்த பகுதியான ஜோகூர், கெலாங் பாத்தா, சுங்கை பூலாய் அருகில் உள்ள படகுத்துறையில் மலேசிய வான் போக்குவரத்து துறை, மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சி மற்றும் விசாரணை தொழில்நுட்பக் குழுவினரின் ஒத்துழைப்புடன் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
போலீஸ் படையின் ஏஎஸ்355என் வகையைச் சேர்ந்த அந்த ஹெலிகாப்டர், கேப்டன் உட்பட ஐவருடன் ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் உள்ள தஞ்சோங் கூப்பாங்கிலிருந்து காலை 9.51 மணிக்குப் பயிற்சியில் ஈடுபட்ட போது விபத்துக்குள்ளானர். ஐவரில் இருவர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி, ஜோகூர் பாரு, சுல்தானா அமீனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.