கோலாலம்பூர், ஜூலை.11-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை, சிறைக்குப் பதிலாக வீட்டுக் காவலில் உடனடியாக வைக்க வேண்டும் என்று அம்னோ கேட்டுக் கொண்டுள்ளது.
இறைவன் அருளில், நஜீப்பை வீட்டுக் காவலில் வைப்பதற்கான ஓர் அரசாணை உத்தரவு உள்ளது என்பது பகிரங்கமாக ஒப்புக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அம்னோவின் முன்னாள் தலைவர் நஜீப், உடனடியாக வீட்டுக் காவலில் வைப்பதற்கான நடவடிக்கைகளைச் சட்டத்துறை அலுவலகம் மேற்கொள்ள வேண்டும் என்று அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி இன்று கேட்டுக் கொண்டார்.
நஜீப் தமது எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக் காவலில் கழிக்க முன்னாள் மாமன்னர் கூடுதலாக ஓர் அரசாணை உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பதை சட்டத்துறை அலுவலகம் நேற்று முன்தினம் கூட்டரசு நீதிமன்ற விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளது.
தமக்கான வீட்டுச் சிறையை அமல்படுத்தக் கோரி நஜீப் செய்து கொண்டுள்ள ஒரு விண்ணப்பத்தை கீழ் நீதிமன்றம் அனுமதித்த நிலையில், அதனை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் கூட்டரசு நீதின்றத்தில் செய்து கொண்ட மேல்முறையீடு மீதான விசாரணை கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
அந்த விசாரணயின் போது, நஜீப்பை வீட்டுக் காவலில் வைப்பதற்கான கூடுதல் அரசாணை உத்தரவு இருப்பதைச் சட்டத்துறை அலுவலகத்தைச் சேர்ந்த முதிர் நிலை வழக்கறிஞர் சம்சூல் போல்ஹசான் ஒப்புக் கொண்டுள்ளார்.
சட்டத்துறை அலுவலகத்தின் முதிர்நிலை வழக்கறிஞரின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு நஜீப் வீட்டுக் காவலில் வைக்கப்பட வேண்டும் என்ற ஓர் உத்தரவு செல்லத்தக்கதாகும். எனவே அதனை உடனடியாக அமல்படுத்துமாறு அம்னோ கேட்டுக் கொள்வதாக டாக்டர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.