ஷா ஆலாம், ஜூலை.11-
வாகன நிறுத்தும் இடங்களைத் தனியார்மயப்படுத்துவதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் மேற்கொண்டுள்ள உத்தேசத் திட்டத்திற்கு மூடா கட்சி பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கார் நிறுத்தும் இடங்களை நிர்வகிக்க முடியவில்லை என்றால் இது சிலாங்கூர் மாநில அரசின் கீழ் உள்ள ஊராட்சி மன்றங்களின் பலவீனமாகும் என்று மூடா கட்சி குறிப்பிட்டுள்ளது.
வாகன நிறுத்தும் இடங்கள் தனியார்மயமாக்கப்பட்டால், அது மூன்றாம் தரப்பினர், கொள்ளை லாபம் ஈட்டவே வழி வகுக்குமே தவிர இதனால் சாமானிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிடலாம் என்று அது எச்சரித்துள்ளது.
வாகன நிறுத்தும் இடங்கள் கால காலமாக ஊராட்சி மன்றங்கள் வாயிலாக நிர்வகிக்கப்பட்டு வரும் வேளையில் அவற்றைக் கூட முறையாக நிர்வகிக்க இயலவில்லை என்றால் இது சிலாங்கூர் அரசின் பலவீனத்தைக் காட்டுகிறது என்று மூடா சாடியுள்ளது.