மஇகாவின் 7 ஆவது தேசியத் தலைவரும், முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சருமான காலஞ்சென்ற துன் டாக்டர் எஸ். சாமிவேலுவின் பெயர், ஈப்போவையும் பட்டர்வொர்த்தையும் இணைக்கும் 9.3 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கிய ஒரு சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.
ஓர் அமைச்சர் என்ற முறையில் நாட்டிற்கு ஆற்றிய சேவை மற்றும் பங்களிப்புக்காக சாமிவேலுவின் பெயர், பேரா,கிந்தா – கோல கங்சார் எல்லையில் தொடங்கி, அவர் 34 ஆண்டு காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை உள்ளடக்கிய சுங்கை சிபூட், தாமான் மக்மூர் சாலை சந்திப்புடன் முடிவடையும் ஈப்போ – பட்டர்வார்த் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளதாக கூட்டரசு அரசாங்கம் தனது பதிவேட்டில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமது 86 ஆவது வயதில் காலமான சாமிவேலு,/ பொதுப்பணித்தறை அமைச்சர் என்ற முறையில் நாட்டின் நெடுஞ்சாலை வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புக்காக ஜாலான் வேதவனத்தில் உள்ள சாமிவேலுவின் வீட்டின் அருகில் வீற்றிருக்கும் கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ சாலை அல்லது கோலாலம்பூர் மாநகரின் நில அடையாளத்தை தாங்கிய ஜாலான் ராஜா லாவுட் சாலைக்கு சாமிவேலுவின் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று அவரின் நீண்ட கால பத்திரிகை செயலாளர் இ. சிவபாலன் பரிந்துரை செய்து இருந்தார்.
அதேவேளையில் 772 கிலோ மீட்டர் தூரத்தை உள்ளடக்கிய வடக்கு தெற்கு தெற்கு நெடுஞ்சாலைக்கு துன் சாமிவேலுவின் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன், அரசாங்கத்தை கேட்டுக்கொண்டு இருந்தார்.
மலேசிய வரலாற்றில் நீண்ட கால பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற பெருமைக்குரிய துன் சாமிவேலுவின் தலைமையில், தென்கிழக்காசியாவில் நீண்ட தூர கடல் பாலமான பினாங்கு பாலம், பிளஸ் எனப்படும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை மற்றும் சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.