அரச மலேசியப் போலீஸ் படையின் துணிச்சல் மிகுந்த “சிங்கம்” என்று வர்ணிக்கப்படும் டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை, புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறையின் புதிய சிஜடி இயக்குநரான நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் பதவி காலம் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக போலீஸ் படையின் செயலாளர் நூர்சியா சாடுட்டின் தெரிவித்துள்ளார்.
அரச மலேசியப் போலீஸ் படையில் குற்றவியல் தடுப்பிற்கான அதிகாரமிக்க மிக உயரிய பதவியான சிஜடி இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள 57 வயதான அயோப் கான், போலீஸ் படையில் “திருவாளர் கைசுத்தம்” என்று புகழப்பட்டவர் ஆவார்.
தற்போது புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் போதைப்பொருள் துடைத் தொழிப்பு பிரிவின் இயக்குநரான பதவி வகித்து வரும் அயோப் கான், பணி ஓய்வுப்பெறும் டத்தோஸ்ரீ அப்துல் ஜலீல் ஹாசன் க்கு பதிலாக அப்பதவியில் அமரவிருக்கிறார்.
புக்கிட் அமானில் பங்கரவாதத் துடைத்தொழிப்பு பிரிவின் உதவி இயக்குநர், ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் உட்பட பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவரான அயோப் கான், ஜோகூர் மாநில போலீஸ் தலைவராக இருந்த போது, இந்தோனேசியாவிலிருந்து சட்டவிரோதமாக தருவிக்கப்படும் கள்ளக்குடியேறிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி அளித்த ஜோகூர் குடிநுழைவுத்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய மிகப்பெரிய கும்பலை முறியடித்தது இவரின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
போலீஸ் படையின் நம்பகத்தன்மையை மீட்டெக்க அயோப் கான், நாட்டின் போலீஸ் படைத் தலைவாக நியமிக்கப்பட வேண்டும் என்று மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளர் எங்கு அகமாட் ஃபட்சில் அலி அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு பரிந்துரை செய்து இருந்தார்.