தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப். சேமிப்பு பணத்தைப், பிணையாக பயன்படுத்தி, சந்தாதாரர்கள், வங்கியில் பெறப்படும் கடனுக்கு ஆண்டுக்கு 4.5 விழுக்காடு வட்டி விதிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இது வழக்கமான தனிநபர் கடனுக்கு வங்கிகள் விதிக்கும் வட்டி விகிதத்துடன் ஒப்பிடுகையில் மிக குறைந்த வட்டி விகிதமாக கருதப்படுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
வர்த்தக வங்கிகளில் தனிநபர் கடனுக்கு 8 முதல் 15 விழுக்காடு வரையில் வட்டி விதிக்கப்படுவதாக நிதி அமைச்சருமான அன்வார் சுட்டிக்காட்டினார்.
55 வயதுக்கு கீழ்பட்ட இபிஎப். சந்தாதாரர்கள், தங்களின் இரண்டாவது கணக்கின் சேமிப்பைப் பிணையாக பயன்படுத்தி வங்கிகளில் இந்தக் கடன் சலுகையைப் பெற முடியும்.
குறைந்த பட்சம் 3 ஆயிரம் வெள்ளியையும், கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளியையும் அவர்கள் கடனாக பெறலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
எனினும் இந்தக் கடன் வசதி, வங்கிகளால் நிர்ணயிக்கப்படும் ஒப்பந்தம் மற்றும் நிபந்தனைக்கு உட்பட்டதாகும் என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.