ஜோகூர், மூவார், கம்போங் சபாக் ஆவோர் என்ற இடத்தில் வீடு ஒன்று தீப்பிடித்துக்கொண்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறார்கள் உயிரிழந்தனர். இத்துயரச்சம்பவம் நேற்று இரவு 7.40 மணியளவில் நிகழ்ந்தது. தீ நாலாபுறமும் சூழ்ந்து கொண்ட நிலையில், வீட்டிலிருந்து தப்பிக்க இயலாமல் தீயின் ஜுவாலையில் சிக்கி 3 முதல் 8 வயதுக்கு உட்பட்ட இரண்டு சிறுவர்களும் , இரண்டு சிறுமிகளும் மாண்டனர்.
80 விழுக்காடு சாம்பலான அந்த வீட்டில், நான்கு உடன்பிறப்புகளில் உடல்கள், குளியல் அறையில் கண்டு பிடிக்கப்பட்டதாக மூவார் மாவட்ட தீயணைப்பு நிலைய செயலாக்க அதிகாரி ஷாரிசால் மொக்தார் தெரிவித்தார்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மூவார் மற்றும் கம்பீர் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 20 வீரர்கள், தீ மற்ற வீடுகளுக்குப் பரவாமல் முழு வீச்சில் அணைத்து, நான்கு சிறார்களின் உடல்களை மீட்டனர். தீ ஏற்பட்டதற்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக ஷாரிசால் மொக்தார் குறிப்பிட்டார்.