Syariah சட்ட விவகாரம் / கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தலைவணங்குவீர்-சிலாங்கூர் சுல்தான் அதிரடி உத்தரவு

கிளந்தான் மாநிலத்தின் 2019 ஆம் ஆண்டிற்கான ஷரியா குற்றவியல் சட்டத்தின் 18 விதிகளுள் 16 விதிகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என்று கடந்த வெள்ளிக்கிழமை புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah ஓர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நாட்டில் கூட்டரசு அரசியலமைப்பு சட்டமே, நீதித்துறை பரிபாலனத்தின் உச்ச சட்டமாகும். அச்சட்டம் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும். அச்சட்டத்தை அனைவரும் மதித்திட வேண்டும் என்று மலேசிய இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தேசிய மன்றத்தின் தலைவருமான Sultan Sharafuddin Idris Shah கேட்டுக்கொண்டார்.

அரசியலமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கு உட்பட்டே ஷரியா குற்றவியல் சட்டங்கள் இயற்றப்படுவதற்கான வழிமுறைகளை ஆராயவும், அவற்றை கையாளுவதற்கான வழிகளை கண்டு பிடிக்கவும் மாநில சட்ட சட்டமன்றம் முற்பட வேண்டும் என்பதுதான் இப்போது முக்கியம் என்று Sultan Sharafuddin Idris Shah வலியுறுத்தினார்.

தகாத உறவு, பாலியல் பலாத்காரம், ஓரினப்புணர்ச்சி உட்பட பல்வேறு குற்றங்களுக்கு 2019 ஆம் ஆண்டு கிளந்தான் மாநில குற்றவியல் சட்டத்தின் அமல்படுத்தப்படும் 18 சட்ட விதிகளுள் 16 சட்ட விதிகள் செல்லத்தக்கவை அல்ல என்றும், / அவை கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானவை என்றும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 9 நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழுவிற்கு தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி Tun Tengku Maimun Tuan தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

ஒரு பெண் வழக்கறிஞரான Nik Elin Zurina Nik Abdul Rashid, இவ்வழக்கில் வெற்றிப்பெற்றார். இதனைத் தொடர்ந்து கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அக்கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் உட்பட பல்வேறு தரப்பினர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் இவ்விவகாரம் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிமையும் சமய மன்றத் தலைவர் சிலாங்கூர் சுல்தானையும் சந்திக்கப் போவதாக அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்புக்கு அனைத்து தரப்பினரும் மதிப்பு அளிக்க வேண்டும் என்று Sultan Sharafuddin Idris Shah உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் கூட்டரசு நீதிமனறத் தீர்ப்பு, கறுப்பு வெள்ளிக்கிழமையாகும் என்று பாஸ் கட்சித் தலைவர்கள் கூறியதையும் சுல்தான் கண்டித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்