கிள்ளான், கம்போங் பென்டாமார் பகுதியில் ஒரு வீட்டின் குளியல் அறையில் பெண்ணின் சடலம் புதைக்கப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த இரு அந்நிய நாட்டவர்கள், கடந்த அக்டோபர் மாதத்தில் வேறு வீடு பார்த்து செல்வதாக வீட்டின் உரிமையாளரிடம் கூறி விட்டு இடம் மாற்றிவிட்டனர்.
அந்த வீட்டை புதிய குடியிருப்பாளருக்கு வாடகைக்கு விடுவதற்கு முன்னதாக, வீட்டை சோதனையிட்ட அதன் உரிமையாளர், குளியல் அறையில் ஒரு இடத்தில் சிமெண்ட் பூசியிருப்பதை கண்டு சந்தேகித்துள்ளார்.
இது குறித்து வாடகைக்கு இருந்தவர்களிடம் கேட்ட போது, செத்த எலிகள் நீரில் அடித்துக்கொண்டு குளியல் அறை வரை வருவதால் அதனை தடுக்க சிமெண்ட் பூசி மெழுகியிருப்பதாக கூறி, சமாளித்துள்ளனர்.
புதிய குடியிருப்பாளருக்கு வீட்டை வாடக்கு விடுவதற்கு முன்னதாக குளியல் அறையில் சீரமைக்கும் பணியை குத்தகையாளரிடம் ஒப்படைத்த போது குளியில் அறையில் சிமெண்டு பூசப்பட்ட பகுதி உடைக்கப்பட்டது.
அப்போது கற்களின் மத்தியில் ஒரு அடி ஆழத்தில் பெண்ணின் சடலம் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டு குத்தகை தொழிலாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இச்சம்பவம் குறித்து வீட்டு உரிமையாளர் போலீசில் புகார் செய்து இருப்பதை சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் உறுதி படுத்தியுள்ளார்.
குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வரும் வேளையில் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.








