தமிழக அரசியல் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறியதற்கு, கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பேச்சு மலேசியா உட்பட உலகெங்கிலும் வாழும் இந்துக்களின் மனதைப் பெரிதும் புண்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மம் என்பது பிறப்பின் அடிப்படையிலான பாகுபாட்டை போதிக்கவில்லை என்றும், அது அமைதி, இரக்கம் மற்றும் உலக ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு உன்னத வாழ்வியல் முறை என்றும் அவர் விளக்கியுள்ளார்.
அரசியல் லாபத்திற்காக இந்து மதத்திற்கு எதிராக இத்தகைய ஆபத்தான கருத்துக்களைப் பரப்புவதை நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ள டான்ஸ்ரீ நடராஜா, உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சைத் திரும்பப் பெற்று உலக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.








