டீசல் விலை உயர்வு காரணமாகக் கட்டுமானப் பொருட்களின் விலை தற்போது 20 முதல் 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதால், ஒட்டுமொத்த கட்டுமானச் செலவு 10 முதல் 15 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக மலேசிய வீடமைப்பு கட்டுமான குத்தகையாளர் சங்கமான பி.கே.பி.எம் தெரிவித்துள்ளது.
இவ்வுயர்வு குறித்து அதன் தலைவர் டாக்டர் முஹ்சின் அப்துல் கனி கூறுகையில், செலவினங்கள் அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் தங்களின் வீடு கட்டும் திட்டங்களைத் தற்காலிகமாக ஒத்திவைத்து வருவதாகக் குறிப்பிட்டார். இதன் விளைவாக, வீடுகளின் விற்பனை விலையும் 10 முதல் 15 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
உதாரணமாக, கிளந்தானில் சதுர அடிக்கு 150 ரிங்கிட்டாக இருந்த கட்டுமானச் செலவு தற்போது 180 ரிங்கிட் வரை உயர்ந்துள்ளது. இதேபோல், கோலாலம்பூரில் சதுர அடிக்கு 250 ரிங்கிட் 300 ரிங்கிட் வரை செலவு அதிகரித்துள்ளதால், வீடுகளின் விற்பனை 30 முதல் 50 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.








