செதாபாக் பகுதியில் உள்ள அரசாங்க சுகாதார நிலையத்தில் நோயாளி ஒருவருக்கு சீன மொழியில் அச்சிடப்பட்ட கண்காணிப்பு அட்டை தவறுதலாக வழங்கப்பட்டதாக கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி ஒன்றில், அரசாங்க சுகாதார நிலையங்களில் ஏன் சீன மொழியில் கண்காணிப்பு அட்டை வழங்கப்பட்டது என நோயாளியின் உறவினர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், அது குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத் துறை, தவறுதலாக அந்த அட்டை வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறி மன்னிப்புக் கேட்டுள்ளது.
நேற்று டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக வந்த குழந்தைக்கு அந்த கண்காணிப்பு அட்டையானது வழங்கப்பட்டுள்ளதாகவும் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அரசாங்க சுகாதார நிலையங்களில், மலாய் மொழியே அதிகாரப்பூர்வ மொழியாக தொடர்கிறது என்றும், இருப்பினும் மக்கள் தொகை அதிகமான பகுதிகளில் நோயாளிகளுடன் எளிமையாகத் தொடர்பு கொள்ள உதவும் வகையில் பல மொழிகளில் கண்காணிப்பு அட்டைகள் தயாரித்து வைத்திருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.








