பிகேஆர் கட்சியில் இருந்து விலகி பார்ட்டி பெர்சாமா மலேசியா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி, பிகேஆரை விட்டு விலகுபவர்களோ அல்லது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் தொடருபவர்களோ ஒருவரை ஒருவர் எதிரியாகக் கருத வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிகேஆர் கட்சியில், இன்னும் தமக்கு நிறைய நெருங்கிய நண்பர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ரபிசி, அவர்கள் அங்கேயே தொடர முடிவு செய்தாலும் தாம் அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஓர் அரசியல் கட்சியில் இணைவதற்கும், அதில் தொடர்வதற்கும் அல்லது விலகுவதற்கும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் காரணங்கள் இருப்பதாகவும் ரபிசி குறிப்பிட்டுள்ளார்.
தானும், பிகேஆர் முன்னாள் உதவித் தலைவரான நிக் நஸ்மி நிக் அகமதும், பார்ட்டி பெர்சாமா மலேசியா கட்சியில் இணைந்ததைக் காரணம் காட்டி, எதிரிகளாகப் பார்க்க வேண்டாம் என்றும் ரபிசி வலியுறுத்தியுள்ளார்.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதனால் தனிப்பட்ட பகை உருவாகக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








