பாலஸ்தீன மக்களுக்கு மனிநேய உதவிகளை வழங்க குளோபல் சுமூத் புளோட்டிலா 2.0 கப்பலில் பயணம் மேற்கொண்ட 16 மலேசியர்களை, இஸ்ரேல் தடுத்து வைத்திருப்பதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை மனித உரிமைகளுக்கும் சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கும் எதிரானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் இந்த செயலுக்கு மலேசியா கடுமையான கண்டனம் தெரிவிக்கிறது என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து செயற்பாட்டாளர்களை பாதுகாப்பாக விடுதலை செய்ய வலியுறுத்துவதாகவும் அன்வார் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், உதவி செல்வதற்கான வழிகளை மறைப்பதும், மனிதநேய குரல்களை ஒடுக்குவதும், பாலஸ்தீன மக்களின் துயரத்துக்காக குரல் கொடுப்பவர்களை துன்புறுத்துவதும் சயோனிச ஆட்சியின் கொடூர மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது என்றும் அன்வார் விமர்சித்துள்ளார்.








