அடுத்த பொதுத்தேர்தலிலும், பண்டான் தொகுதியை பிகேஆர் கட்சியானது, தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என அத்தொகுதி பிகேஆர் தலைவர்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அன்வாரின் மூத்த அரசியல் ஆலோசகரான தெங்கு ஜாஃப்ருல் அஜீஸ் தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், ஜோகூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பக்காத்தான் மாநாட்டில், பாண்டான் தொகுதியைச் சேர்ந்த பிகேஆர் தலைவர்களை தாம் அன்வாரிடம் அறிமுகம் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, அவர்களிடம் பேசிய அன்வார், பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியை பிகேஆர் தக்க வைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில், பிகேஆர் சார்பில் பண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி தற்போது அக்கட்சியிலிருந்து விலகியதுடன், தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
அவருடன் பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அகமத், கட்சியிலிருந்து விலகியதுடன் செத்தியாவங்சா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.
இருவரும் நேற்று தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜொஹாரி அப்துலிடம் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளனர்.
அவர்கள் இருவரும் எடுத்துள்ள முடிவு குறித்து, கடந்த மே 17-ம் தேதி, தெப்ராவ்வில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அன்வாரிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவர்களை தாம் கவனிப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரபிசி ரம்லியும், நிக் நஸ்மியும் பார்ட்டி பெர்சாமா மலேசியா என்ற கட்சியில் அதிகாரப்பூர்வமாகத் தங்களை இணைத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








